Home » நினைவேந்தும் உரிமையை நிலைநாட்டத் துணைசெய்யுங்கள்: சிறீதரன் எம்.பி

நினைவேந்தும் உரிமையை நிலைநாட்டத் துணைசெய்யுங்கள்: சிறீதரன் எம்.பி

by namthesamnews
0 comment
ஈழத் தமிழர்களின் நெடுங்கால மரபுகளின்வழிப்படி இந்தமுறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, மலர்தூவி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதன் மூலம் எங்களைத் நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற நினைவேந்தல் நிகழ்வுகளை, இராணுவத் தலையீடுகளோ, பொலிஸாரின் அச்சுறுத்தல்களோ இல்லாது அமைதியான வழியில் கடைப்பிடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வாருங்கள். இவ்வாறு சிங்கள இளையோரை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நெருங்கியிருக்கும் நிலையில், இக் காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் அதிகரிக்கப்பட்டிருக்கும் இராணுவக் கெடுபிடிகள் தொடர்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதது. இதற்கமைய ஈழத்தமிழர்கள், எமது இன விடுதலைக்காக தம் உயிர்நீத்த தமது பிள்ளைகள் விதைக்கப்பட்ட விளைநிலங்களான துயிலும் இல்லங்களுக்குச் சென்று நினைவேந்தும் உரிமையை நிலைநிறுத்தத் தொடங்கியிருந்தார்கள்.
ஆனால், தமது உறவுகளை இழந்து துன்பத்தில் இருக்கும் நெஞ்சம் எவ்வாறு இருக்கும் என்பதை உணர மறுக்கும் அதிகாரக் கரங்கள், அடிப்படை மனிதாபிமான உணர்வுகளைக் கூடப் புறந்தள்ளி மேலும் மேலும் எங்கள் மக்களை வஞ்சிக்கும் செயற்பாட்டையே மிகக் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன.
இனி எப்போதும் போரை விரும்பாத எமது மக்கள், பயங்கரவாதம் எனப்படுகின்ற இயல்புகளுக்கு ஒத்திசையாத வகையில் தங்களின் பிள்ளைகளை, அவர்கள் புதைக்கப்பட்ட நிலங்களில் சென்று வழிபடுவதற்கும், விளக்கேற்றுவதற்கும், கண்ணீர்விட்டு அழுவதற்குமான சந்தர்ப்பங்களைத் தடுக்கும் வகையில் அச்சுறுத்தல்களும், விசாரணைகளும் பரவலாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
போர் முடிவுற்று 13 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும், வடக்கு, கிழக்கிலுள்ள 27 மாவீரர் துயிலும் இல்லங்களில், 12 துயிலும் இல்லங்கள் இன்றுவரை இராணுவப் படை முகாம்களாக காணப்படுகின்றன.
குறிப்பாக,யாழ்ப்பாண மாவட்டத்தின் கொடிகாமம், எள்ளங்குளம், கோப்பாய் ஆகிய துயிலும் இல்லங்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லம், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, ஆலங்குளம், அளம்பில், நெடுங்கேணி களிக்காடு, மற்றும் மணலாறிலுள்ள உதயபீடம், கோடாலிக்கல் புனிதபூமி ஆகிய துயிலும் இல்லங்கள், வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லம், மட்டக்களப்பு தாண்டியடி துயிலும் இல்லம் ஆகியவையே இன்றுவரை இராணுவப் படை முகாம்களாக முற்றுகையிடப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில், தமது பிள்ளைகளின் கல்லறைகள் அத்தனையும் போரியல் மாண்புக்கு புறம்பான வகையில் இடித்தும், பெயர்த்தும் அழிக்கப்பட்ட பின்னரும், அந்தக் கல்லறைகள் நிறைந்திருந்த துயிலும் இல்லங்களைத் தமது புனிதபூமியாக எண்ணியே தமிழர்கள் இன்றளவும் பூசிக்கிறார்கள்.
தமிழர் தாயகத்தில், திரும்பும் திசையெல்லாம் ஆக்கிரமிப்பின் கால்கள் ஆழ வேரூன்றிப் போயிருக்கின்றன.
இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் மீதான ஆக்கிரமிப்பும், வழிபாட்டுரிமை மீதான தடையும் மீளவும் வலிந்து ஏற்படுத்தப்படக் கூடும் . இந்த மனநிலையில் மக்களிடையே ஆழப்பதிந்திருக்கிறது.
இந்நிலையில் மக்களிடம் அரசு மீதான நம்பிக்கையீனமும், துயிலும் இல்லத்தின் புனிதத்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதில் அவர்களுக்கிருக்கும் ஆத்ம எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் துயிலும் இல்ல வளாகங்களை எல்லைப்படுத்துவதிலும் அலங்கரிப்பதிலும் எம் மக்களிடத்தே ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எம் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, காலத்தின் தேவை கருதியும் துயிலும் இல்ல மரபுகளுக்கமையவும் கனகபுரம், முழங்காவில் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய மூன்று துயிலும் இல்லங்களினதும் நுழைவாயில் முகப்புகளை, அரை நிரந்தரமானவையாக நிறுவியுள்ளோம்.
அரசு எமக்கெதிராக பூச முற்படுகின்ற பயங்கரவாத முலாம் குறித்த எந்தக் குறியீடுகளும்  காட்சிப்படுத்தப்படவில்லை.
ஆனால் போரை நினைவுபடுத்துகின்ற, நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற எந்தவொரு அடையாளங்களும் இல்லாத வெற்று முகப்புகளை நிறுவியமைக்காக, இதுவரை நான் உட்பட பதின்மூன்று பேர் பொலிஸாரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம்.
தமிழர்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்தது மட்டுமன்றி, தமிழர் தாயகப் பகுதிகளின் பெருநகரங்களிலும், பிரதான வீதிகளிலும் ஏராளமான போர் வெற்றிச் சின்னங்கள் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளன.
தமது அடிப்படை உரிமை கோரிப் போராடிய ஒரு இனத்தைத் தோற்கடித்துவிட்டோம் எனும் மமதையையும், போரின் குரூரத்தையும், படையினரது ஆக்கிரமிப்புச் சிந்தையையும் முகத்திலறைந்தாற்போல் பிரதிபலிக்கும் ஆயுத கலாசார நினைவுச்சின்னங்கள் சீர்குலைக்காத இன நல்லிணக்கத்தை, அவை நினைவுபடுத்தாத போரியல் உணர்வுகளை, நினைவேந்தல் உரித்தை நிலைநாட்டுவதற்காக அமைத்த துயிலும் இல்ல முகப்புகள் சீர்குலைக்கும் என்று சிந்திப்பதுகூட ஆக்கிரமிப்பின் அதியுச்ச வெளிப்பாடாகவே தென்படுகிறது – என்றார்.
இதேவேளை தேராவில் துயிலும் இல்ல விடுவிப்புத் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தின்போது கையளிக்கப்பட்ட மகஜரின் பிரதி, புதிதாக நிறுவப்பட்டுள்ள துயிலும் இல்ல முகப்பின் நிழற்படம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள இராணுவ நினைவுச் சின்ன புகைப்படங்கள் ஆகியவை சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு நாடாளுமன்றிலும் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00