63
தீபாவளி என்றதும் புத்தாடையும், இனிப்புகளும், பட்டாசுகளும் நினைவுக்கு வருவது இயல்பு. ஆனால் வட இந்தியா போல் அல்லாமல் தமிழ்நாடு அசைவத்துடன் பண்டிகையை கொண்டாடி வருகிறது.
தீபாவளிக்கு பல புராணக் கதைகள் சொல்லப்படுகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் வீடு திரும்பிய நாளே தீபாவளி என்று ராமாயணம் ஒரு கதை சொல்கிறது. மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளை சமணர்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்ட நாள் என்றும் கூறுகின்றனர். மேலும் பஞ்சாபில் 1577ல் இந்த தினத்தில் தான் பொற்கோயில் கட்ட தொடங்கினர். அதனால் அந்த நாளினை கொண்டாடுகிறார்கள் என்றும் கூறுகின்றனர். குஜராத்தோ இந்த நாளை புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கிறது.
மேற்கூறிய காரணங்களால் வட இந்தியாவில், பலதரப்பட்ட மத நம்பிக்கைகளின் பேரில் தீபாவளிளை புனித நாளாக கருதுவதால் அங்கு சைவ உணவுகள் மட்டுமே உண்ணப்படுகிறது.
தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடுவதற்கான வரலாற்று தரவுகள் மிக்குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பண்டிகை விசயநகரப் பேரரசில் தெலுங்குப் பார்ப்பனர்கள் வழியே வந்திருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இருப்பினும் தமிழர் மரபில் விருந்து என்றால் அது இறைச்சி உணவை மையப்படுத்தியே இருந்துவருகிறது. முக்கியமான நபர்களுக்கு இறைச்சி விருந்தை படைப்பதே பெருமையாக பார்க்கப்படுகிறது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
வட இந்தியாவில் புனிதமாக பலராலும் பார்க்கப்படும் தீபாவளி, தமிழ்நாட்டில் அசைவ உணவுகளுடன் கூடிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலையில் குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்கள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து, பசியாற இறைச்சியை தான் நாடுவர்.
இந்த தீபாவளியை மகிழ்வோடும் பாதுகாப்புடனும் , பிடித்த உணவுடனும் கொண்டாடுங்கள்.