111
சிங்கப்பூரில் மதிப்பு மிகுந்த உயரிய கலை விருதினை இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளர் பெற்றுள்ளார்.
கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த, சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூர் அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான இந்த விருதினை 81 வயதான மீரா சந்த்திற்கு வழங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று இஸ்தானாவில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்திடமிருந்து மீரா சந்த், சக நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலாய் நாட்டு நடனக் கலைஞரான ஒஸ்மான் அப்துல் ஹமீத் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றனர்.
விருது மற்றும் 49 லட்ச ரூபாய் பணம் ஆகியவை இதில் அடங்கும்.
இந்திய தந்தைக்கும், சுவிஸ் தாயிற்கும் லண்டனில் பிறந்த மீரா சந்த், இங்கிலாந்திலேயே கல்வி கற்றார்.
இவர் தனது இந்தியக் கணவருடன் 1962யில் ஜப்பான் சென்றார். அங்கே சர்வதேச பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஜப்பானை விட்டு 1971இல் இந்தியா வந்த அவர்கள் 5 ஆண்டுகள் இந்தியாவிலேயே தங்கினர். இங்கே தான் முதன் முதலில் அவர் எழுதத் தொடங்கினார்.
இவர் பலதரப்பட்ட கலாச்சாரங்களை கொண்ட சமூகங்கள் குறித்து புத்தகங்கள் எழுதி புகழ் பெற்றவர் ஆவார்.
தற்போது தனது 81வது வயதில் சிங்கப்பூரின் உயரிய விருதினை வென்றுள்ளார்.
கடந்த ஆண்டில் 56 வயதான தமிழர் இந்து அரவிந்த் குமாரசாமிக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.