இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 21.10.1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இரானுவத்தினர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த 21 பேரைச் சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலைப் பணியாளர்களின் ஏற்பாட்டில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் இன்று வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான பொதுச்சுடரை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளரும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி ஏற்றிவைத்தார்.
இதையடுத்து உயிர்நீத்தவர்களின் உறவினர்களும் தமது உறவுகளை நினைவேந்தி சுடரேற்றியதைத் தொடர்ந்து நினைவுப் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் வைத்தியசாலைப் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.