நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை 20 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுகின்றது. மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை கடந்த 10 ஆம் திகதி முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திகதியில் கப்பல் சேவை தொடங்கப்படவில்லை. நிர்வாக காரணங்களால் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், 12ஆம் திகதி காலை 7 மணிக்கு இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திகதியிலும் கப்பல் சேவை இயக்கப்படாமல் 14 ஆம் திகதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.
நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையைத் தொடக்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையைத் தொடக்கிவைத்தனர்.
அதன் பிறகு காலை 8.15 மணியளவில் 50 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நோக்கிக் கப்பல் புறப்பட்டது. அதன்பிறகு காங்கேசந்துறையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு 29 பயணிகளுடன் புறப்பட்டு வந்த கப்பல் நாகை துறைமுகத்தை மாலை 5.15 மணிக்கு வந்தடைந்தது.
அடுத்த நாள் கப்பலில் பயணம் செய்ய வெறும் 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால் கப்பல் சேவை இரத்துச் செய்யப்பட்டது. இந்தநிலையில், நாளை 20 ஆம் திகதியுடன் நாகை – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மீண்டும் கப்பல் சேவை ஜனவரி மாதம் முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் நிறுத்தத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்தச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.