89
இஸ்ரேலிய படையினரால் காஸாவில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களின் பலியான சிறுவர்களை நினைவுகூரும் வகையில் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், மதத்தலைவர்களும், பொதுமக்களும் அச்சிறுவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தபக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த ஒரு மாதகாலமாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் பெருமளவான சிறுவர்கள் உள்ளடங்கலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளின் அரசாங்கங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்துவருவதுடன் அதன் மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியுள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட நாடுகள் உட்பட உலகில் பல்வேறு நாடுகளிலும் எவ்வித இன, மத, மொழி பேதங்களுமன்றி சகல மக்களும் ஒன்றிணைந்து இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கான வன்மையான கண்டனத்தையும், பலஸ்தீன மக்களுடனான தமது உடன்நிற்பு மற்றும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்திவருகின்றனர்.
அந்தவகையில் கடந்த சில வாரங்களாக இலங்கையிலும், குறிப்பாக தலைநகர் கொழும்பில் பலஸ்தீன மக்களுக்கான ஆதரவையும், உடன்நிற்பையும் வெளிப்படுத்தும் வகையிலான கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன் ஓரங்கமாக இஸ்ரேலிய படையினரால் காஸாவில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் பலியான சிறுவர்களை நினைவுகூரும் அதேவேளை, இஸ்ரேல் – பலஸ்தீன போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையிலான நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மதத்தலைவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் காஸாவில் கொல்லப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், அப்புகைப்படங்களின் முன்னால் மெழுகுவர்த்திகளை ஏற்றியும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையிலான அட்டைகளை வைத்தும் அச்சிறுவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட்டும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.