சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பேச்சாளரினால் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றக்கூடிய சிறப்புத் தூதுவராக முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனை நியமிக்குமாறு அவர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவது, எதிர்காலத்தில் இனப்படுகொலைகளைத் தடுப்பது, தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைப் பெறுவது ஆகியவையே தங்களது முதன்மை நோக்கங்களாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழரல்லாத ஆட்சியாளர்களிடமிருந்து தமிழர்களை விடுவித்து அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை அவசியமாகிறது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொசோவா, பொஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளைப் போன்று, வெற்றிகரமான வாக்கெடுப்புக்கள் மூலம், தமிழர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கு தீர்வு காண்பதில் சர்வதேச ஆதரவு முக்கியமானது என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
எனவே பொஸ்னியாவில் மோதல்களைத் தீர்ப்பதில் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான மாதிரியைப் பின்பற்றி, இலங்கைக்கான அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.