89
2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. நேற்றைய தினம், நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.
இந்தநிலையில், பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
வாரத்தில் ஞாயிறு தவிர்ந்து மீதமுள்ள ஏனைய நாட்களில் விவாதம் இடம்பெறவுள்ளது. அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அதனையடுத்து, குழுநிலை விவாதம் 22ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரையில் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய, 2024 நிதியாண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், 1.3 மில்லியன் அரச ஊழியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் 7 ஆயிரத்து 800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்து 17 ஆயிரத்து 800 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
அத்துடன், இந்தக் கொடுப்பனவின் அதிகரிப்பு ஏப்ரல் மாதம் முதல் மாதாந்த வேதனத்துடன் சேர்த்து வழங்கப்படவுள்ளது அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ரூபாவிலிருந்து 6 ஆயிரத்து 25 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு 2024 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்வியை விரிவாக்கும் நோக்கில் நான்கு புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு 2024 ஆம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
இது தவிர விசேட தேவையுடையவர்கள் மற்றும் முதியவர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்டத்துறையின் காணி விடயங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டு தொகை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைய, அரசாங்கத்தின் மொத்த செலவீனம் சுமார் 7,833 மில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது. இதில் பொதுச் சேவைக்கான செலவீனத்துக்கு 3,861 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.