95
2025ல் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இலங்கை அணி தவறவிட்டுள்ளது.
நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கவுள்ள 8 அணிகளின் பட்டியல் முடிவாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) ஒருநாள் போட்டிகளுக்கென இரண்டு தொடர்களை நடத்தி வருகிறது. அதில் ஒன்று உலகக்கோப்பை தொடர், மற்றொன்று சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகும்.
இதுநாள் வரையில் ஒருநாள் போட்டிகளின் தரவரிசையின்படி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தன.
ஆனால், இப்போது உலகக்கோப்பை தொடரில் லீக் ஆட்டங்களில் அணிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணிகள் தேர்வு செய்யப்படுகிறது.
இந்த தொடருக்கான பட்டியலில் ஒரு அணியாக, போட்டியை நடத்தும் நாட்டினுடைய அணி நேரடியாக தேர்வு பெறும். மீதம் 7 அணிகள் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் தகுதி பெறும்.
இதன் மூலம் 2025ல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தவிருக்கும் பாகிஸ்தான் அணி நேரடியாக தேர்வு பெற்றுள்ளது. நடைபெற்று வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டங்களில் முடிவில் பாகிஸ்தான் ஐந்தாவது இடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் புள்ளிப் பட்டியல் வரிசைப்படி தேர்வாகியுள்ளன.
உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டுள்ளன.
வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தாலும், நெட் ரன்ரேட் அடிப்படையில் 0.3 என்ற வித்தியாசத்தில் வங்கதேச அணி தேர்ச்சி பெற்று 8வது அணியாக தேர்வானது.
1996ல் உலகக்கோப்பை, 2002ல் சாம்பியன்ஸ் டிராபி, 2014ல் டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை வென்ற இலங்கை அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி கூட பெறவில்லை என்ற செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.