உதவி கேட்காமல் மக்களோடு மக்களாக மீட்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமீர்கான்! பாராட்டிய தமிழக அமைச்சர்

சென்னை மழைநீரில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவி கோராமல் மீட்கப்பட்டது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 மிச்சாங் புயலால் சென்னையில் மிக அதிக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இதில் பலர் சிக்கி தவித்து வந்த நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மேயர் ப்ரியா ராஜன், அமைச்சர்கள் உட்பட பலர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை தமிழ்த் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் தனது X தளத்தில், தன் காரப்பாக்கம் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது என்று உதவி கேட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து 4 மணியளவில் அவரது வீடு இருக்கும் பகுதிக்கு சென்ற மீட்பு படையினர் அங்கே சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
அப்போது பிரபல இந்தி நடிகர் அமீர்கானும் விஷ்ணு விஷாலுடன் மீட்கப்பட்டார்.
அமீர்கான் தனது தாயாரின் மருத்துவத்திற்காக சென்னை வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மீட்கப்பட்ட பின்னர் விஷ்ணு தனது X தளத்தில் அரசிற்கும், நிர்வாகத்திற்கும், மீட்புக்குழுவினருக்கும் தன் நன்றியை தெரிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு பதிலளித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி‌.ராஜா, “தமிழ்நாடு அரசின் செயல்பாட்டினை பாராட்டியதற்கு நன்றி விஷ்ணு விஷால். சிறந்த மனிதராக திகழும் உங்கள் பக்கத்தில் இருப்பவருக்கும் நன்றி.
மீட்பு பணியை பெற அவருடைய புகழை அவர் பயன்படுத்தாதது என்னை பிரமிக்க வைக்கிறது. தனது செல்வாக்கை பயன்படுத்தி தேவையானவற்றை சாதிக்கும் நபர்களுக்கு மத்தியில் அவர் ஒரு பாடமாக உள்ளார்.
புயலின் தீவிரத்தை உணர்ந்து மீட்பு உதவிகள் வரும் வரை, எளிய மனிதர்களை போல் காத்திருந்த அமீர்கான் போன்றவர்களுக்கு நன்றி. மீட்பு பணிகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

ATM மையத்திற்கு வந்தவரிடம் போலீஸ் கைவரிசை!

போலீஸ் கஸ்டடியில் சவுக்கு சங்கர்!

6 வயது சிறுவனை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்!