களைகட்டிய விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இங்கு திமுக, பாமக, நாம் தமிழர் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் காலை 9 மணி நிலரவப்படி 12.94 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மேலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டளித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் அவர் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில்மொத்தம் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து இன்று (10) ஓட்டுப்பதிவு தொடங்கி உள்ளது. தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க தொடங்கி உள்னர். தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர 110 வாக்குச்சாவடிகளில் வெளிப்பகுதியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காலையில் தேர்தல் தொடங்கிய உடன் 5 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதன்பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் தான்விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 12.94 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மொத்தம் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 30,667 பேர் ஓட்டளித்துள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஜுலை 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!