வான் டெர் டுசன் சதம் அடித்தும் லாகூர் அணி தோல்வி

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் அணியை வீழ்த்தியது.

Gaddafi மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற லாகூர் குவாலண்டர்ஸ் (Lahore Qalandars) அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸல்மி அணியில், கேப்டன் பாபர் அசாம் 36 பந்துகளில் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரர் சைம் அயூப் ருத்ரதாண்டவம் ஆடினார். அவருடன் ரோவ்மன் பாவெல் அதிரடியில் மிரட்டினார்.

இதன்மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அயூப் 55 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்தார்.

அடுத்து வந்த ஆசிப் அலி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் பெஷாவர் அணி 211 ரன்கள் குவித்தது. பாவெல் 20 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினார்.

லாகூர் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளும், ஜஹண்டட் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய லாகூர் அணியில் தொடக்க வீரர்கள் சாஹிப்சடா பர்ஹான் (15), பக்ஹர் ஜமான் (4) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய வான் டெர் டுசன் (Van Der Dussen) சிக்ஸர் மழை பொழிந்தார். மறுமுனையில் ஷாய் ஹாப் 29 ரன்களும், அஹ்சன் 20 ரன்களும் விளாசி வெளியேறினர்.

எனினும் அரைசதம் கடந்த வான் டெர் டுசன் மூலம் அணி வெற்றியை நெருங்கியது. ஆனால் கடைசி ஓவரை பால் வால்டர் துல்லியமாக வீச 8 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் அணி தோல்வியுற்றது.

அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. சதம் விளாசிய வான் டெர் டுசன் ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 104 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!