மூடப்படும் திரையரங்கினால் வைரமுத்து வேதனை

சென்னையில் உதயம் திரையரங்கம் மூடப்படுவதால் தனது இதயம் கனப்பதாக கவிஞர் வைரமுத்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் 41 ஆண்டுகளாக இயங்கி வரும் திரையரங்கம் உதயம். இது 1983ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

இந்த திரையரங்கம் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 திரைகளைக் கொண்டது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவந்த உதயம் திரையரங்கத்தில் சமீபத்தில் கூட்டம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த திரையரங்கம் தற்போது மூடப்படுகிறது. இங்கு கட்டுமான நிறுவனம் ஒன்று இந்த இடத்தை வாங்கியிருப்பதாகவும், குடியிருப்பு வளாகம் இங்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

உதயம் திரையரங்கம் மூடப்படுவதற்கு கவிஞர் வைரமுத்துவும் வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், ‘ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது; இதயம் கிறீச்சிடுகிறது.

முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன், ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன.

மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது.

இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும். நன்றி உதயம்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!