இந்தியா,சீனா ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், தூதுவர் பதவிகளில் வெற்றிடம் – விரைவில் நியமிக்க கோரும் துறைசார் மேற்பார்வைக் குழு

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், தூதுவருக்கான பதவிகளில்
வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், இந்தப் பதவிகளுக்குப் பொருத்தமானவர்களை நிரந்தரமாக நியமிப்பதற்குத் தேவையான தலையீட்டை விரைவில் மேற்கொள்ளுமாறு சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஸ வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இலங்கையுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட பலம் வாய்ந்த நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்கள் நியமனம் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் கூடிய விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்ற தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் இல்லாதது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. உள்ளிருப்புப் பயிற்சிகளைப் பெற்ற 25 பேர் அமைச்சில் பணிக்கமர்த்தப்பட்டிருப்பதும் இங்கு புலப்பட்டதுடன், பணி வெற்றிடங்களை நிரப்புவதற்குஉடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு இங்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இலங்கைக்கும் ஏனைய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் கருத்துக்களை வெளியிட்டு விளக்கமளித்தனர். ஆசிய நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் அவற்றின் சாதகமான அபிவிருத்திக்கு தேவையான தலையீடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவுகள் மற்றும் வெளிநாட்டுக்கொள்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மஜித் மொஸ்லெ தன்னார்வ அடிப்படையில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!