ATM மையத்திற்கு வந்தவரிடம் போலீஸ் கைவரிசை!

சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (வயது 50). இவர் சென்னை கீழ்பாக்கம் ஈவேரா சாலையில் அமைந்துள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 9ம் தேதி இரவு பணம் செலுத்துவதற்காக வந்துள்ளார்.

அப்போது கையில் வாக்கி டாக்கியுடன் வந்த நபர் ஒருவர் தாம் காவல் அதிகாரி என்றும், நீங்கள் வைத்திருக்கும் ரூ.34 ஆயிரத்து 500 மீது தமக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி சித்திக்கிடம் இருந்து பணத்தை பிடுங்கிச் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சித்திக் அருகில் இருந்த கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது பணத்தை பறித்துச் சென்றது சென்னை ஐசிஎப் காவல் நிலைய போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி (வயது 55) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருவதும் தெரிய வந்தது.

இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை கீழ்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பணத்தை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!