ட்ரினிடாட்டில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் (11) மற்றும் வில் ஜேக்ஸ் (7) அடுத்தடுத்து சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பிலிப் சால்ட் (Philip Salt) அதிரடியாக 22 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் மோட்டி ஓவரில் போல்டு ஆனார்.
பின்னர், இரண்டு சிக்ஸர் விளாசிய லிவிங்ஸ்டன் 28 (29) ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீசின் மோட்டி 3 விக்கெட்டுகளும், ரசல், அக்கேல் ஹூசேன் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. சார்லஸ் அதிரடியாக 27 ரன் எடுக்க, அடில் ரஷீத் அவரை அவுட் செய்தார்.
எனினும் ரூதர்போர்டு மற்றும் ஷாய் ஹோப் இருவரும் கூட்டணி அமைத்து ஸ்கோரை உயர்த்தினர்.
ரூதர்போர்டு 24 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் விளாசிய நிலையில், ரஷீத் ஓவரில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனாலும் நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப், கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றியை அணியை வெற்றி பெற வைத்தார்.
அவர் 43 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.