மொட்டு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு!

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளர் நியமனம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஒரு பிரிவினர் அதிபர் தேர்தலில் தமது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், மற்றைய பிரிவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

கட்சியின் செயற்குழு கூடியபோது, ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமானவர்கள் ஸ்ரீலங்கா பெரமுன வேட்பாளரை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அவ்வாறானதொரு யோசனை தோன்றிய போதிலும், தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாததால், அது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல் இடம்பெறவில்லை.

ஆனால், தற்போது அரசாங்கத்தில் பதவி வகிக்கும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணிலை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தகுதியானவர்கள் எவரும் இல்லை எனவும், கட்சி வேட்பாளரை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை தேசிய அமைப்பாளராக நியமித்ததையும் அவர் பகிரங்கமாக விமர்சித்தார்.

அதற்குப் பதிலாக பசில் ராஜபக்ச அத்தகைய பதவியின் பொறுப்புகளை கவனித்திருக்க வேண்டும் என்றார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சித்துள்ளது, ஆனால் அதிபர் ரணில் அதைச் செய்ய மறுத்துவிட்டார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!