சிவப்பு நிறமாக மாறிய நதி..

ரஷ்யாவில் இஸ்கிதிம்கா என்ற நதியில் தண்ணீரின் நிறம் சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதாக அதிர்ச்சிதகவல் வெளியாகியுள்ளது.

கெமரோவோ தொழில் நகரத்திற்கு அருகாமையில் உள்ள நதி ஒன்றிலே இவ்வாறு சிவப்பு நிற நீர் காணப்படுள்ளது.

இந்த நிலை குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ள உள்ளூர் மக்கள் ஆற்றில் கால் வைக்கவே அச்சம் கொண்டுள்ளனர்.

மொத்த நதி நீரும் சிவப்பு நிறத்தில் மாறியிருப்பது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் தொடர் விளைவுகள் குறித்து ரஷ்ய மக்கள் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது.

காரணத்திற்கான கணிப்புகளும், விசாரணைகளும் ரஷிய சுற்றுச்சூழல் அதிகாரிகள், இஸ்கிதிம்கா நதியின் மாசுபாடு குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், நதியில் அடைபட்டுள்ள கழிவுப் பொருள் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

இதுகுறித்து கெமரோவோ நகரத்தின் துணைநிலை ஆளுநர் ஆண்ட்ரே பனோவ் கூறுகையில், “மாநகரின் மழைநீர் கால்வாயில் இருந்து ஏதேனும் பொருள் கலந்து, நதியின் நிறம் இவ்வாறு மாறியிருக்கலாம்’’ என்று தெரிவித்தார்.

எனினும், இதற்கு மிகச் சரியான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டிலும் இதே ரஷிய நாட்டில் டீசல் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து வெளியான டீசலால் சைபீரியன் நகரத்திற்கு அருகாமையில் உள்ள ஆர்டிக் நதிகளிலும் இதுபோலவே ரத்தச் சிவப்பு நிறத்திற்கு தண்ணீர் மாறியிருந்தது.

அந்த சமயத்தில் தண்ணீரில் 15,000 டன் டீசலும், நிலத்தில் 6 ஆயிரம் டன் டீசலும் கலந்தது.

அதைத் தொடர்ந்து, அதனை தேசிய பேரிடர் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.

தற்போது மீண்டும் ஒருமுறை அதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் நடக்கின்ற அலட்சியம் அல்லது விபத்து காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற ஆபத்தின் வீரியத்தை உணர்த்துவாக இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!