2023ஆம் ஆண்டு கடந்து வந்த பாதை – முழு தொகுப்பு உள்ளே..

Sri Lanka Flag Backlit At Beautiful Sunrise Loop Slow Motion 4K

2023ஆம் ஆண்டு நாடு பல மாற்றங்களை சந்தித்துள்ளது.

இந்நிலையில் நெருக்கடியில் சிக்கித்தவித்த நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையில் புதிய அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் சந்தித்தோம்.பொருளாதார சிக்கலில் இருந்து சற்று மீண்டும் வந்த இலங்கையின் 2023ஆம் ஆண்டு பயணம் பற்றிய மேற்பார்வை

ஜனவரி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்தார்.

இலங்கை பெற்றுக்கொண்ட கடனை 2 வருடங்களுக்கு இடைநிறுத்துவதாக சீனா உறுதிமொழி அளித்தது.

நுவரெலியா – நானுஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து குற்றப்புலனாய்வின் இரகசிய அறிக்கை கிடைக்கப்பெற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவர் நடவடிக்கை எடுக்க தவறியதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பெப்ரவரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர், 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி தலைமையில் புதிய நாடாளுமன்ற கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் வடிவேல் சுரேஷ் வெளியேறினார்.

மார்ச்

இலங்கையில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க செனட் சபை வெளிவிவகார குழுவிற்கு வலியுறுத்தியது.

இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கையில் உடனடியாக தேர்தலை நடத்தக்கோரி சர்வதேச ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் நிறைவு பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து ஆராய ஜனாதிபதியினால் விசேட குழு நியமிக்கப்பட்டது.

பயங்கரவாத உத்தேச சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

தையிட்டிப் பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இலங்கையில் மத சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், மத சுதந்திர நிலைமைகள் கரிசனை அளிக்கும் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம்சாட்டியிருந்தது.

ஏப்ரல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீளப் பெறுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்தது.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஒரு வருடம் நிறைவு. (ஏப்ரல் 09 ஆம் திகதி)

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி தலையீடு செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை வேண்டுகோள் விடுத்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 04 வருடங்கள், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

எக்ஸ்பிரஸ் பேர்ஸ் கப்பல் விபத்தினால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மே

நாட்டின் பல பகுதிகளிலும் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற 7 சிவாலங்களை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன், 15 ஆண்டுகளின் பின்னர் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

வடக்கு கிழக்கு வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார் ( 3.5 தங்கபிஸ்கட்களுடன் கைது)

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரனை 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

கிளிநொச்சி- தர்மபுரம், மயில்வாகனம் காட்டுப்பகுதியில் சுமார் 500 கிலோ கிராம் நிறையுடைய விமானக் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டது.

தமிழர் தாயகப் பகுதி தொடர்ச்சியாக கபளீகரம் செய்யப்படுவது தொடர்பில் புதிய ஆதாரங்களை சேகரித்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை கருத்து வெளியிட்டது.

ஜீன்

யாழ். மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 4 மணித்தியால வாக்குமூலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்தியா நாகப்பட்டினம் திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் எண்ணெய் குழாய் அமைப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என பிரிட்டனின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி வேண்டுகோள் விடுத்தார்.

ஜூலை

முத்துராஜா யானை மீண்டும் தாய்லாந்திற்கு அனுப்பப்பட்டது

25ஆவது ஆசிய மெய்வல்லுனர் செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு இரண்டு வெண்கலப்பதக்கங்களும் 25 வருடங்களின் பின்னர் ஒரு வெள்ளி பதக்கமும் கிடைத்தது.

கொழும்புக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான யாழ்தேவி தொடருந்து சேவை 6 மாதங்களின் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணித்தார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.

1996ஆம் ஆண்டு 91 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்தஇ இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உள்ளிட்ட இருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

ஓகஸ்ட்

மாண்புமிகு மலையகம் எனும் தொனிப்பொருளின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் லண்டனில் இடம்பெற்ற விபத்தில் 75ஆவது வயதில் காலமானார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கான பாதீடு சமர்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற பொங்கல் வழிபாடே தமிழர்களின் இறுதி பூஜையாக இருக்க வேண்டும் என குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி 100 நாட்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செப்டம்பர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ‘செனல் 4’ தொலைக்காட்சியில் ஆவணப் படமொன்று வெளியிடப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ‘செனல் 4’ தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் குழு நியமனம்

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

நீதி கோரி போராட்டங்கள் வலுப்பெற்றன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் அகழ்வுபணிகளின் போது விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை பெற்ற சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ”G77 குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி கியூபாவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் பங்கேற்பதற்காக அமெரிக்கா விஜயம் மேற்கொண்டார்.

ஒக்டோபர்

Popular Awards விருது வழங்கல் நிகழ்வில் ஹிரு ஊடக வலையமைப்புக்கு பல விருதுகள் கிடைக்கப்பெற்றன.

குருந்தூர் மலை விவகாரம், தொடர்பான வழக்கினை ஆராய்ந்து வந்தஇ முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தமது பதவியிலிருந்து விலகி வெளிநாட்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் ஒரு தாய்க்கு 6 குழந்தைகள் பிறந்து ஒரு குழந்தை மரணித்தது.

நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகளின் கண்டன போராட்டம் வலுப்பெற்றது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரியும் , நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் வடக்குஇ கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கில் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை – காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆர்மபிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல் நடத்தப்பட்டது

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாட்டில் தெரிவித்தார்.

கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் பேருந்தின் மீதுமரமொன்று முறிந்து வீழ்ந்த சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நவம்பர்

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாம் 200 நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டிற்கான பாதீடு திருத்தங்களுடன் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

நுவரெலியா மற்றும் கண்டி அஞ்சல் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக அஞ்சல் பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

உலக றக்பி பேரவை இலங்கை றக்பி மீது விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்பட்டது.

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான ஏழு பேர் கொண்ட இலங்கை கிரிகெட்டுக்கு இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டது.

10ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவதால் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கையை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்தது.

அமைச்சரவை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அனைத்து அமைச்சுப் பதவிகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பறிக்கப்பட்டது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.

டிசம்பர்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் தடை மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து இறக்குமதி தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள், இலங்கையில் பெருந்தோட்டத் தொழிற்துறை மற்றும் பிற முக்கியமான உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதில் வழங்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் நினைவு அஞ்சல் முத்திரையொன்று வெளியிடப்பட்டது.

நாசா ஆய்வு நிறுவனம்நடத்திய வரைதல் போட்டில் 7வயது சிறுவன் முதலிடம்.

புதிய மின்சார சபை சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டது.

இந்திய தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற சரிகமப எனும் பாடல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 2 சிறுமிகள் பங்குப்பற்றிய நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா உதயசீலன் மகுடம் சூடினார்.

வற் வரி திருத்தம் காரணமாக அனைத்து வகையான பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என சங்கங்கள் அறிவித்தன.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!