மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்! இன்று கூடுகிறது சட்டப்பேரவை..தமிழக அரசியலில் பரபரப்பு

பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் பேரில், அந்த மசோதாக்களை திரும்பவும் நிறைவேற்றி அனுப்ப சட்டமன்றம் இன்று கூடுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி அவை ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படும்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் மசோதாவானது ஆளுநரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாகும்.
இந்நிலையில் இதற்கு முன்பாக அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய ஆளுநர் ரவி, கிடப்பில் போட்டிருந்த மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆளுநரால் ஒரு முறை திருப்பி அனுப்பப்பட்டு, சட்டமன்றத்தில் திருத்தப்பட்டு மீண்டும் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை மறுமுறை எவ்வித ஆட்சேபனையும் இன்றி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது சட்டம் ஆகும்.
அந்த வகையில் ஆளுநர் ரவி , சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி சட்டத்திருத்த மசோதா , வேளாண் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா மற்றும் சித்தமருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா ஆகியன அடங்கிய 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியிருந்தார்.
இந்த மசோதாக்களை சட்டமன்றத்தினை கூட்டி, நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்த நிலையில் இன்று சட்டமன்றம் கூடுகிறது.
அதன் அடிப்படையில் இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் அனுப்பப்படும் மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும்.
சனநாயகத்திற்கு முரணாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு எதிராக, ஒன்றிய அரசின் கைப்பாவையாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்ற வாதம் பொதுமக்களிடம் பரவலாக உள்ள நிலையில், இன்று கூடும் சட்டமன்ற சிறப்புக் கூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!