ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்! நீதிமன்றம் தடாலடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டதற்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
வழக்கின் போது கிடப்பில் போட்டிருந்த மசோதாக்களை ஆளுநர் அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பியிருந்தார்.
அதனை தமிழ்நாடு அரசு, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தினை கூட்டி மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநரிடம் அனுப்பி வைத்தது.
இந்நிலையில், இன்று ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் “சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
காரணம் கூறாமல் நிறுத்தி வைத்ததால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கும் அனுப்ப இயலாது. அவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். காரணம் இருந்தால் மட்டுமே குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடியும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் இச்செயலை கண்டித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவிர மீதமுள்ள அரசுப் பதவி நியமனங்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில், குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பி‌.வி.ரமணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கிடையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் திரு.ரகுபதி “சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. இத்தனை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டேன் என்று மீதம் உள்ள மசோதாக்களை நிறுத்தி வைப்பது அழகல்ல. தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்” என்று கூறினார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!