சீன ராக்கெட் சர்ச்சை: திமுக கொடுத்த விளக்கம்

பிரதமர் மோடியை வரவேற்கும்விதமாக செய்திதாள்களில் கொடுக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் சீன ராக்கெட் இருந்தது தொடர்பாக திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி நேற்று தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.

அதற்கு வரவேற்பு தெரிவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

விளம்பரத்தின் பின்னணியில் இருந்த ராக்கெட்டில் இந்திய ராக்கெட்டுக்கு பதிலாக சீன கொடியுடன் ராக்கெட் படம் இருந்தது.

இதனால் பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி கூட தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், “குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள திறப்பு விழாவில் திமுக ஒரு விளம்பரம் கொடுத்துள்ளது. அதில், சீன நாட்டின் கொடியுடன் கூடிய ராக்கெட் படத்தை போட்டுள்ளார்கள். இதிலிருந்தே இவர்களின் நாட்டு பற்று நன்றாக தெரிகிறது” என விமர்சித்தார்.

இதற்கு திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர், “குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் சீன கொடி அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. அதில், எந்த உள்நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது. நான் இந்தியன்தான். இந்தியா மீது பற்றுள்ளவன்தான்” என்றார்.

மேலும், திமுக எம்பி கனிமொழி, “யாரோ வடிவமைப்பு செய்தவர், அப்படிப்பட்ட ராக்கெட் சின்னத்தை போட்டிருக்கிறார்.

சீன அதிபர் தமிழகம் வந்தபோது அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இருவரும் மகாபலிபுரத்தில் வாக்கிங்கெல்லாம் போனார்கள். அப்படியிருக்கும் சூழலில் அதை எதிரி நாடு என இதுவரை யாரும் அறிவிக்கவில்லை” என்றார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!