தமிழக அரசியல் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத பெயரை கேப்டன் பெற்றிருக்கிறார் – பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்..

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு சுமார் 15 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் தனது 71வது வயதில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.

அவரது உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்தின் மறைவுக்கு தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அர்ஜுன், விஜய் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘கேப்டனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தீவுத்திடலில் இடம் ஒதுக்கி கொடுத்து, இறுதி ஊர்வலத்திற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் நமது கேப்டன் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

நமக்கு கிடைத்த புள்ளி விவரங்களின்படி, இரண்டு நாட்களில் 15 லட்சத்திற்கும் மேலான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு நமது கேப்டன் செய்த தர்மமும், அவரின் நல்ல எண்ணமும், மக்களுக்கு உதவும் குணமும் தான் காரணம்.

தலைமை அலுவலகம் சிறியதாக இருந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியவில்லை. இறுதி அஞ்சலி செலுத்த வந்த அனைத்து தலைவர்களுக்கும் தேமுதிக சார்பாக நன்றி.

கேப்டன் கையில் அணிந்திருந்த கட்சி மோதிரத்தை அவருடனே வைத்து நல்லடக்கம் செய்திருக்கிறோம்.

எப்படி மெரினாவில் தலைவர்களுக்கு சமாதி அமைத்திருக்கிறார்களோ, அதேபோல் தலைவருக்கும் இங்கு சமாதி அமைக்கப்படும்.

அவர் நம்மில் ஒருவராக நம்முடன் தான் இருக்கிறார். அவர் சொர்க்கத்தில் இருந்து நம்மை வாழ்த்தி கொண்டுதான் இருப்பார்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!