2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்பிக்கப்படும்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய வரவு – செலவு திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு – செலவு திட்டம் இதுவாகும். இம்முறை வரவு – செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வசதி குறைந்த மக்களுக்கு நிவாரண திட்டங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதிகள் என பல முன்மொழிவுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
 மேலும் வரவு – செலவுத்திட்ட விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் இடம்பெறவுள்ளது. அத்துடன், வரவு செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, குழுநிலை விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 ஆம் நியதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!