அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.

தற்போது சிறையில் இருக்கும் அவர், இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார். இதனால், அவர் வகித்த மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, செந்தில்பாலாஜி ஜாமின் கேட்டு அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களையும் நாடினார். ஆனால், அவருக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

இந்நிலையில், செந்தில்பாலாஜி முதல்வர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!