சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன்களில் வென்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. குஜராத் அணிக்காக விளையாடிய சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் என இருவரும் சதம் விளாசியது அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

இதன் மூலம் இருவரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்தனர். அதிக ரன்களுக்கு அமைக்கப்பட்ட பார்ட்னர்ஷிப்பில் இருவரும் 210 ரன்கள் சேர்த்து, அந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது குஜராத்.

சதம் விளாசிய பிறகு சாய் சுதர்ஷன் தெரிவித்தது. “இது சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது. ஆட்டத்தில் எங்கள் திட்டங்களை எண்ணியபடி செயல்படுத்தியதில் மகிழ்ச்சி. பேட் செய்ய விக்கெட் உதவியது. முதலில் பந்து ஸ்டிக் ஆகி வந்தது. கில் ஆட்டத்தை பார்த்து பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.

நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். அந்த வகையில் இந்த இன்னிங்ஸ் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்” என தெரிவித்தார். சென்னை அணிக்கு எதிராக 4 இன்னிங்ஸ் ஆடியுள்ள சாய் சுதர்ஷன், 250 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும்.

அதோடு மிக குறைந்த இன்னிங்ஸ் ஆடி ஐபிஎல் கிரிக்கெட்டில் 1000+ ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். மொத்தம் 25 இன்னிங்ஸ் ஆடி இந்த ரன்களை அவர் எட்டினார்.

இதற்கு முன்னர் குறைந்த இன்னிங்ஸ் ஆடி 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருந்தனர். அவர்கள் இருவரும் 31 இன்னிங்ஸில் இந்த ரன்களை எட்டி இருந்தனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த அணிகள்!