சென்னையில் ரூ.1.08 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று இரவு துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த 30 வயது பயணி ஒருவரை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அவருடைய உடமைகளை சோதனை செய்த போது அதில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், அவரது இரண்டு காலணிகளையும் ஆய்வு செய்த போது, அதன் மிதியடிகளில் தங்கப் பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

ஒரு கிலோ 300 கிராம் எடையிலான தங்கப் பசை இருந்ததை அடுத்து, அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர். மீட்கப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு 85 லட்சம் ரூபாய் ஆகும்.

இதே போல் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் ஒன்று நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த 40 வயது பெண் பயணி ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரது பையில் 350 கிராம் எடையுள்ள தங்கச் செயின்கள் மற்றும் வளையல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் சர்வதேச மதிப்பு 23 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து அந்த பெண் பயணியை கைது செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!