நிலவுக்கு ராக்கெட்..எண்ணெய் கழிவுகளை நீக்க பக்கெட்? கொந்தளித்த கமல்ஹாசன்

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மிச்சாங் புயலின் போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், சி‌.பி.சி.எல் ஆலையில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் பர்மிங்காம் கால்வாய் வழியாக தாழ்வான பகுதிகளில் தேங்கியது.
சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எண்ணெய் பரவி இருந்தது.
எண்ணெய் கழிவை அகற்றும் முயற்சியில் தமிழக அரசு மற்றும் சி‌.பி.சி.எல் நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது தமிழக அரசுடன் மும்பை நிறுவனமான சீ கேர் மரைன் சர்வீசஸ் நிறுவனமும் இணைந்து பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் உள்ள எண்ணெய் கழிவுகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் பார்வையிட்டார்.
ஃபைபர் படகில் சென்று பார்வையிட்ட அவர் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெறும் பக்கெட்டை மீனவர்கள் கையில் கொடுத்து எண்ணெயை அள்ளச் சொல்வது மனிதாபிமானற்ற செயல்.
சந்திரனுக்கு ராக்கெட் விடும் தொழில்நுட்பம் இருக்கும் நம்மிடம் இதற்கு உபகரணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
மேலும், இதற்கென கருவிகள் இருக்கிறது. அந்த கருவிகள் கொண்டு வந்து சுத்தம் செய்யப்பட வேண்டும்.
அதற்கான செலவில் பெரும் பகுதியை அந்த எண்ணெய் நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்றும், சி.பி.சி.எல் எண்ணெய் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!