மாகாண சபைகளுக்கும் அதிகாரம் வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபைகள் முழுமையான அதிகாரத்துடன் இயங்கினாலேயே  புலம்பெயர்ந்தோரின் முதலீடுகள் கிடைக்கும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டி நிற்கும் நிலையில்,  மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கும் முன்வர வேண்டும்.
ஜனாதிபதி  தனது வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பில் தெரிவித்ததைப் போல் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிலங்களை வழங்குவது மற்றும் முதலீட்டாளர்களுக்கான  சலுகைகளை வழங்குதல் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் வழங்கக்கூடிய அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி, விவசாயம், உற்பத்திசார் தொழிற்சாலைகள், சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலைகள், கடல் வளங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான வலுவான திட்டங்கள் அடங்கலாக பல செயற்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
மாகாண சபைகள் வெறுமனே தீர்மானம் இயற்றும் நிறுவனங்களாக  மட்டும் இல்லாது, சட்டமியற்றும் நிறுவனங்களாக மாற வேண்டும். எனவே தான் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் அச்சமின்றி முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள்.
எல்லா மாகாணங்களுக்கான தேர்தல்களையும் நடத்துவதில் பிரச்சினைகள் காணப்படும் ஆயின்,  குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்களையாவது நடத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு புலம்பெயர்ந்தவர்களது முதலீடுகள் தேவை என்பதை ஜனாதிபதி விரும்பினால், முதலில் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும்.
தற்போது 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில்  முன்னேற்றத்தைக் கொண்டு வருபவர்களாக திகழ்கின்றனர். – என  சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!