உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம்: உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தீவிர கரிசனை

உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு விசேட பெரும்பான்மை அவசியம் எனவும், ஒருசில ஏற்பாடுகள் குழுநிலையில் திருத்தம் செய்யப்படுமாயின் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு விமர்சனங்களையும், எதிர்ப்புக்களையும் தோற்றுவித்திருந்தது. அதுமாத்திரமன்றி அச்சட்டமூலத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அம்மனுக்களைப் பரிசீலித்ததன் பின்னரே செவ்வாய்கிழமை உயர்நீதிமன்றம் மேற்குறிப்பிட்டவாறு தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து தீவிர கரிசனை வெளியிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், முன்மொழியப்பட்டுள்ள குழுநிலை திருத்தங்கள் ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி இது அரசியலமைப்பின் 78(3) ஆம் பிரிவுக்கு முரணானது என்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மீதான குழுநிலை திருத்தத்தின்போது ‘உண்மையான தகவல்’ என்பதற்கு வழங்கப்பட்டுள்ள விரிவான வரைவிலக்கணம் நீக்கப்படல், இச்சட்டமூலத்தின் நோக்கங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல், நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழுவுக்கான உறுப்பினர் நியமனம் மற்றும் நீக்கம் என்பன அரசியலமைப்புப்பேரவையின் ஊடாக மேற்கொள்ளப்படக்கூடியவகையில் திருத்தியமைக்கப்படல், வாக்களிப்பு செயற்முறையில் மாற்றங்களை ஏற்படுத்தல், நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தல், தடைசெய்யப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கான தண்டனைகளைப் பதிலீடுசெய்தல் போன்ற முன்மொழிவுகள் உள்வாங்கப்படும் எனவும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண, ‘இது மிகமோசமான நிலைவரம்’ என அதனை வர்ணித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!