சங்கானையில் 350 ஏக்கரை கையகப்படுத்த திட்டம்!!! – அரச அதிபரால் கடிதம் அனுப்பி வைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான சுமார் 350 ஏக்கர் கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வனப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தொரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால் சங்கானை பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி பொது அமைப்புகளிடம் பிரதேச செயலாளரால் இது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் குறித்த விடயத்தை எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த பகுதி மக்கள் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதை முற்றிலும் நிராகரித்திருக்கிறார்கள்.
கரையோர பகுதி மக்களின் வாழ்வாதரமே கடற்கரையை நம்பியே காணப்படுகின்றது. மாட்டுவண்டி சவாரித்திடல், சுடுகாடுகள், விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. ஆகவே வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் முன்மொழிவை முற்றிலும் நிராகரிக்கிறோம்.
குறித்த பகுதியை வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கினால் விகாரைகள், சிங்கள குடியேற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இதே போல முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களின் வாழ்வாதாரம் காணிகள் பல வனவளத் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலையில் இதே போன்ற நிலைமை சங்கானையிலும் ஏற்படக்கூடாது.
ஆகவே யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறித்த முன்மொழிவை நிராகரித்து வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!