கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழக மக்களுக்கு பாதிப்பா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளவுகளும் ஏற்படுவதாக பலர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி, மிக அரிதாக பக்க விளைவை ஏற்படுத்தும் என்று அஸ்ட்ரா ஜெனெகா கூறியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலானோர் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பலரும் தடுப்பூசியால் தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில்,  கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எந்த விதமான தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறனை பொறுத்து தான் விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் மாதிரியான பிரச்சனைகள் சிலருக்கு இருக்கலாம். ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் அது போன்ற பாதிப்புகள் வெளியில் தெரியவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறையாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் கோவிஷீல்டு தொடர்பான பக்கவிளைவு சம்பந்தமாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!