புதிய விசா முறையால் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த புதிய விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள், வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையினை 230,000 ஆகவும், வருடத்திற்கான சுற்றுலா வருமானத்தில் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பினையும் ஏற்படுத்தும் சாத்தியம் அதிகரித்துள்ளது. எனவே, புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் இயக்கப்படும் இலத்திரனியல் பயண அங்கீகார முறையிலிருந்து IVS-GBS மற்றும் VFS Global  ஆல் இயக்கப்படும் தளத்திற்கு இலங்கை மாற்றப்பட்டது. இந்த புதிய தளத்தின் கீழ், 75 அமெரிக்க டொலர் செலவில் பல நுழைவு விசா அறிமுகப்படுத்தப்பட்டது. இவை ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 60 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ETA ஆல் முன்னர் வழங்கப்பட்ட ஒற்றை நுழைவு விசா விருப்பங்கள் சேர்க்கப்படவில்லை. அதுமாத்திரமன்றி இந்தப் புதிய விசா முறைமையை இயக்குபவரிற்கு சேவைக் கட்டணமாக 18.5 அமெரிக்க டொலர் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த 30 நாள் ஒற்றை நுழைவு விசா சேர்க்கப்படாதது பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது மாத்திரமல்லாமல் இது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!