மைக் சின்னமா? படகு சின்னமா? சீமானின் முடிவு என்ன?

நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வேறு சின்னத்தைக் கோருவதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி கடந்த காலங்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அவர்களுக்கு அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

அவர்கள் தாமதமாக விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கட்சி கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்றுவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதைத் தொடர்பாக நாம் தமிழர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் நாம் தமிழர் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்குவதாகத் தேர்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இருப்பினும், அந்த சின்னம் வேண்டாம் என்று நாம் தமிழர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி கேட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அவரது சின்னம் குறித்த கோரிக்கை குறித்து ஓரிரு நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நாம் தமிழர் இந்த முறையும் வழக்கம் போல அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!