ஸ்டாலினுக்கு ஜே.பி. நட்டா சவால்!

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அம்மாநில முதல்வர் ஸ்டாலினுக்கு வெளிப்படையாக சவால்விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக பல்வேறு பகுதிகளாக உடைந்துகிடப்பதால், அந்த வாக்குகளை எல்லாம் தங்கள் பக்கம் இழுக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர்.

அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று(பிப்.11) சென்னை வருகை தந்தார். அப்போது மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையில் கலந்து கொண்டார்.

அதன்பின் அங்கு நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ” பிரதமர் மோடியின் மனதில் தமிழ்நாடு மிகவும் நெருக்கமாக உள்ளது. பிரதமர் மோடி உலகின் எந்த பகுதிக்கு சென்று உரையாற்றினாலும் தமிழ் மொழி, தமிழ் புலவர் பற்றி பேசி வருகிறார்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட தமிழ்நாடு, தற்போது மோசமான நிலையில் உள்ளது. தி.மு.க. தலைமையில் இங்கு மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை. இன்று நான் வரும் வழியில் மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் யாரையும் வெளியே வர அனுமதிக்கவில்லை. இது எனக்கு எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தியது.

மு.க.ஸ்டாலினுக்கு இன்று நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க.வின் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் விரைவில் வரும்” என்று சவால்விட்ட்டார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!