சென்னையில் நடந்த சோதனையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல்!

சென்னையில் 5 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை (ஐ.டி) சோதனையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய ஆவணங்களின்றி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுசெல்லப்படும் பணம், பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர்.

சென்னையில் சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுபற்றி அவர்கள் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (2) சென்னையில் 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு, புரசைவாக்கம் கொண்டித்தோப்பு, கொரட்டூர் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களின் வீடுகள் என 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இதில் தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொரட்டூரில் மட்டும் ரூ.2.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்பது தெரிய வந்துள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!