212 ரன்னை டை செய்த ஆப்கான்..இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்தியா மிரட்டல் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஃபரீத் அகமது பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், கோலி ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அதேபோல் சஞ்சு சாம்சனும் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

அதன் பின்னர் கூட்டணி அமைத்த ரோகித் சர்மா, ரிங்கு சிங் ருத்ர தாண்டவம் ஆடினர்.

கேப்டன் ரோகித் சர்மா 48 பந்துகளில் 5வது சதத்தினை பதிவு செய்தார். அதேபோல் ரிங்கு சிங்கும் அதிரடியாக அரைசதம் விளாசினார்.இறுதியில் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது. ரோகித் 121 (69) ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும்.

ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் குவித்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜட்ரான் இருவரும், இந்திய அணியின் பந்துவீச்சை சிதைத்தனர்.

32 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்து குர்பாஸ் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஜட்ரானும் 50 (41) அவுட் ஆக, குல்பதின் நைப் சரவெடியாய் வெடித்தார். ஓமர்சாய் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, நபி அதிரடியில் மிரட்டினார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. நைப் 55 (23) ரன்களும், நபி 34 (16) ரன்களும் விளாசினர்.

இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 16 ரன்கள் எடுத்தது.

பின்னர் இறங்கிய இந்தியாவும் 16 ரன்கள் எடுக்க மீண்டும் போட்டி டை ஆனது. இதனால் ரசிகர்களின் நாடித்துடிப்பு எகிறியது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. இம்முறை இந்தியா முதலில் ஆடியது.

ரோஹித் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி பின் ஒரு ரன் எடுத்தார். ஆனால் ரிங்கு சிங் கேட்ச் கொடுத்து அவுட் ஆன நிலையில், ரோஹித் ரன் அவுட் ஆனதால் இந்தியா 11 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில், பிஷ்னோய் வீசிய ஓவரில் முதல் பந்தில் நபி straight-யில் அடித்த பந்தை, ரிங்கு சிங் எளிதாக கேட்ச் செய்தார்.

அடுத்து வந்த ஜனத் ஒரு ரன் எடுக்க, குர்பாஸ் அடித்த ஷாட்டை ரிங்கு சிங்கே மீண்டும் கேட்ச் செய்ய இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3-0 என தொடரை கைப்பற்றி இந்திய அணி வாஷ் அவுட் செய்தது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!