சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (13) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. குறித்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வேலைவாய்ப்பு மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மக்களிடம் இருந்து பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. கண்டி, பின்னதுவ ஹேவே, அம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அனுர என்ற நபரே இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப்பிரிவு பிரதம பொலிஸ் பரிசோதகர் நளினி திஸாநாயக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மோசடி நபர்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருன்றமை குறிப்பிடத்தக்கது.