நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்த நிலையில் இன்று 2வது நாளாகவும் சென்னையில் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நகை வாங்க ஆர்வமாக கடைகளில் கூடி வருகின்றனர்.
ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.50 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக தங்கம் மாறும் சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென சரிய தொடங்கி உள்ளது.
இதற்கு நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட் தான் காரணம். நேற்றைய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம், வெள்ளி நகைகளுக்காக இறக்குமதி வரி (சுங்கவரி) என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரையும், பிளாட்டினம் நகைகள் மீதான இறக்குமதி 6.4 சதவீதமாகவும் குறைப்பதாக அறிவித்தார். இதையடுத்து நேற்றைய தினமே தங்க நகை விலை அதிரடியாக குறைந்தது.
இந்நிலையில் தான் இன்று 2வது நாளாக தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு மேலும் 480 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.51,920க்கு விற்பனையாகிறது. மேலும் 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 சரிந்து 6,490 ஆக விற்பனையாகிறது.
தங்கம் மீதான இறக்குமதி வரி நேற்று குறைக்கப்பட்ட நிலையில் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று, இன்று என 2 நாட்களில் மட்டும் ஒரு கிராமிற்கு ரூ.320ம், ஒரு சவரனுக்கு ரூ.2,560 வரை தங்கம் சரிந்துள்ளது. சமீபத்தில் 2 நாட்களாக இந்த அளவுக்கு தங்கம் விலை என்பது குறையவில்லை.
இதனால் நகை கடைகளில் தங்கம் வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் தற்போதைய இறக்குமதி வரி குறைப்பால் தொடர்ந்து தங்கத்தின் விலை சரியலாம் என்று நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.