இப்போதும் இந்தியர்கள் என்னை திட்டுகிறார்கள்! தோனியின் உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து மனம் திறந்த நியூசிலாந்து வீரர்

நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை ரன் அவுட் செய்த நிகழ்வை பற்றி பகிர்ந்துள்ளார்.
2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின.
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. இதனால் 240 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அந்நேரத்தில் களத்தில் இறங்கிய தோனி (Dhoni) மற்றும் ஜடேஜா (Jadeja) இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தனர்.
அப்போது 48.3வது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க தோனி ஓடும்போது ரன் அவுட் செய்யப்பட்டார்.
நியூசிலாந்தின் மார்டின் கப்தில் (Martin Guptill) அடித்த துல்லியமான த்ரோ நூலிழையில் தோனியை அவுட் ஆக்கியது.
ரன் அவுட் செய்யப்பட்ட தோனி கலங்கியபடி வெளியேறிய நிலையில், ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
துரதிர்ஷ்டவசமாக அதுவே தோனி கடைசியாக இந்தியாவிற்காக விளையாடிய சர்வதேச போட்டி ஆகும்.
அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை தோனி அறிவித்தார்.
இதுகுறித்து தற்போது லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் விளையாடி வரும் கப்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அந்த ரன் அவுட் குறித்து பேசுகையில்,
“அது திடீரென நடந்தது. எனக்கு நினைவில் இருப்பதெல்லாம், பந்து மேலே சென்றதையும் அது என்னை நோக்கி வருவதையும் பார்த்து ஓடினேன்.
பந்தை ஸ்டம்புகளை நோக்கி வீச வாய்ப்பு இருக்காது என்று தெரியும். ஆனாலும் முயற்சித்தேன்.
அந்த இடத்திலிருந்து என்னால் ஒன்றரை ஸ்டம்புகளை தான் பார்க்க முடிந்தது. நான் வீசியது சரியான த்ரோவாக மாறியது என் அதிர்ஷ்டம்.
இதன் காரணமாகவே இன்றும் கூட மொத்த இந்தியாவுக்கும் என்னை பிடிக்கவில்லை. இப்போதும் கூட தோனியை ரன் அவுட் செய்ததற்காக இந்தியர்கள் என்னை திட்டி மெயில் அனுப்பி வருகின்றனர்.” என்று கூறியுள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!