சர்வாதிகாரத்தை நோக்கி நாடு! – பேராயர் எச்சரிக்கை

நாட்டை (இலங்கையை) சர்வாதிகாரத்தை நோக்கி முன்நகர்த்திக் கொண்டு செல்லும் அரசின்  முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அரசால் அண்மையில் முன்மொழியப்பட்டுள்ள ‘இணையவழி பாதுகாப்புச் சட்டம்’ தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த ‘இணையவழி பாதுகாப்புச் சட்டம்’  நாட்டு மக்கள்  தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மற்றும் உண்மையைத் தேடுதல் ஆகியவற்றை மட்டுப்படுத்தும்.

எமது  நாட்டிற்கு தொலைநோக்கு பார்வையிலான மாற்றமே அவசியம். இந்த நாட்டிற்கு அனைத்து சமூகங்களும் மதங்களும் பொதுவாக மற்றும் சமமாக நடத்தப்படும் ஒரு சட்ட மாற்றமே தேவை.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மைகளை வழங்கும் பொருளாதாரத்துடன், நாட்டை தன்னிறைவு அடையச்செய்வதுடன், வெளிநாட்டு சக்திகளிடமிருந்து நாட்டின் (இலங்கையின்) அனைத்து வளங்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்படும் ஒரு புதிய நாட்டை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

கடந்த காலங்களில், நாட்டை ஆட்சி செய்து வந்த பாரம்பரிய அரசியலை நிராகரிக்க வேண்டிய தருணம் இது.

நாட்டின் அடக்குமுறை அரசியல் தலைமைத்துவத்தை இல்லாது விரட்டி நாட்டை நேசிக்கும் சிறந்த தலைமைத்துவத்தை நிறுவ வேண்டிய தருணம் இது.

“சில செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வானொலி நிலையங்கள்
இணைக்கப்பட்டுள்ளன அல்லது சில அரசியல் குழுக்களுக்கு விசுவாசமாக உள்ளன. அது மட்டுமல்லாது. அவை மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றன.

இருப்பினும், நாட்டு மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், அரசால் அண்மையில் முன்மொழியப்பட்டுள்ள ‘இணையவழி பாதுகாப்புச் சட்டம்’ மூலம் அரசாங்கம் சமூக ஊடக ஒழுங்குமுறைகளை மேற்கோள் காட்டி, நாட்டு மக்களின் கருத்து வெளியிடும் உரிமையையும், தேடுவதற்கான உரிமையையும் மட்டுப்படுத்த முயற்சிக்கிறது. – என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!