இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழம் போன்றவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சீன மக்கள் குடியரசின் சுங்க நிர்வாக பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் உள்ளிட்ட தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவித்ததாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, கோழி இறைச்சி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை இலங்கை உற்பத்தியாளர்களுக்கு சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது நாட்டின் இந்த விவசாயப் பொருட்களை சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கு நீண்டகாலமாக இருந்த தடைகளை நீக்குவதற்கு விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பல பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்புகளை சீனாவில் விரிவுபடுத்துவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சீன பிரதி அமைச்சர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.