முல்தான் சுல்தானை 5 ரன்னில் வீழ்த்திய பாபர் அசாம் அணி

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் ஸல்மி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தானை வீழ்த்தியது.

முதலில் ஆடிய பெஷாவர் அணியில் அயூப் 7 ரன்னில் அவுட் ஆக, கேப்டன் பாபர் அசாம் 31 ரன்கள் எடுத்த நிலையில் உஸாமா மிர் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

அதனைத் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஹஸீபுல்லா கான் 18 பந்துவீச்சில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் விளாசி 37 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த முகமது ஹாரிஸ் (19), பால் வால்டர் (16) தங்கள் பங்குக்கு ரன் எடுத்து ஆட்டமிழக்க, ரோவ்மன் பவல் 11 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார்.

கடைசிவரை களத்தில் நின்ற லுக் வுட் 12 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுக்க, பெஷாவர் 179 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வானை டக்அவுட் ஆக்கினார் லுக் வுட்.

எனினும், யாசிர் கான் மற்றும் ஹென்றிக்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவித்தனர். யாசிர் கான் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து தாவித் மலான் அதிரடியில் மிரள வைத்தார். அவர் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார்.

பின்னர் ஹென்றிக்ஸ் 28 ரன்களில் வெளியேற முல்தான் அணி விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 174 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதால் பெஷாவர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெஷாவர் தரப்பில் யாகியூப் 3 விக்கெட்டுகளும், லுக் வுட், நவீன் உல் ஹக் மற்றும் சல்மான் இர்ஷாத் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!