500வது விக்கெட்டை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500வது விக்கெட்டை வீழ்த்தினார்.

ராஜ்கோட்டியில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கியபோது ஜக் கிராவ்லேவை 15 ரன்களில் அஸ்வின் அவுட் செய்து வெளியேற்றினார்.

இது அவரது 500வது டெஸ்ட் விக்கெட் ஆகும். இந்த சாதனையை படைத்த இரண்டாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவார்.

அத்துடன் சர்வதேச அளவில் 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய 9வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

அஸ்வின் 184 இன்னிங்சில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 8 முறை 10 விக்கெட்டுகளையும், 34 முறை 5 விக்கெட்டையும் அவர் வீழ்த்தியிருக்கிறார்.

வரலாற்று சாதனை படைத்த அஸ்வினுக்கு முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் தனது வாழ்த்தில், ”லட்சங்களில் ஒருவரால் மட்டுமே இந்த சாதனையை படைக்க முடியும்; சுழற்பந்துவீச்சில் அஸ்வின் தான் எப்போதும் வெற்றியாளர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்பது பாரிய மைல்கல். வாழ்த்துக்கள் சாம்பியன்..!” என கூறியுள்ளார்.

அதேபோல் அனில் கும்ப்ளே, ”டெஸ்ட் கிரிக்கெட்டில் 625, 630 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகுதான் ஓய்வு பெற வேண்டும். உங்களின் சாதனை அதற்கு குறைவாக இருக்கக்கூடாது” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!