பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

உலகப்புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று ஏப்ரல் 23 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஆகியவை வழக்கமான உற்சாகத்துடன் இந்தாண்டும் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலையில் தொடங்கிய தேரோட்டத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் குவிந்து மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரை வணங்கினர்.

இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில், பக்தர்கள் அலைகடலென திரண்டு வந்து வழிபட்டனர். கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்ட பக்தர்கள் அழகரை மனமுருக வழிபட்டனர்.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஒட்டி பாதுகாப்புப்பணியில் 7 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். மதுரை தல்லாக்குளம் கருப்பண சாமி கோயிலில் இருந்து வந்த கள்ளழகரை லட்சக்கணக்காணோர் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.

பக்தர்கள் வருகையால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மதுரை மட்டுமின்றி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். வைகை ஆற்றில் இறங்கிய அழகர், நன்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபம் செல்கிறார்.

அழகர் கோயில் விழாவில் வரும் 26 ஆம் தேதி கருப்பண சாமி கோயிலில் பிரியா விடை நிகழ்ச்சியும், தொடர்ந்து வரும் 27 ஆம் தேதி மேல் அழகர் மலையில் உள்ள இருப்பிடத்தையும் அழகர் அடைகிறார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!