106
கிரிக்கெட் விராட் கோஹ்லியால், சச்சினுடைய 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியாது என்று பிரையன் லாரா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லி, God Of Cricket என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்து வருகிறார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்து சச்சினின் சாதனையை கோஹ்லி முறியடித்தார்.
மேலும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் விளாசிய சச்சினின் சாதனையை, நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் தனது 50வது சதத்தை விளாசி விராட் கோஹ்லி முறியடித்தார்.
மேலும் இந்த தொடரில் 765 ரன்கள் விளாசி உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் புரிந்தார்.
இதனை தொடர்ந்து, சச்சினின் இமாலய சாதனையான 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோஹ்லி முறியடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால், அதற்கு வாய்ப்பு இருந்தாலும் அதை கோஹ்லி சாதித்து காட்டுவது எளிதாக இருக்காது என்று கிரிக்கெட் உலக ஜாம்பவானாக பலராலும் அழைக்கப்படும் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோஹ்லிக்கு தற்போது 35 வயது. அவர் தற்போது வரை 80 சதங்கள் அடித்துள்ளார். இன்னும் அவருக்கு 20 சதங்கள் வேண்டும்.
இனிவரும் ஒவ்வொரு வருடமும் 5 சதங்கள் அடித்தாலும், அவரால் சச்சினின் சாதனையை சமன் செய்ய இன்னும் 4 வருடங்கள் ஆகும். இதை செய்து முடிப்பது கடினமான செயல் தான்.
ஏனெனில் 20 சதங்கள் அடிக்க நீண்ட காலமானது தேவைப்படும். 20 சதங்களை பல வீரர்கள் தன் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் கூட அடித்தது இல்லை. ஆதலால் விராட் கோஹ்லி அந்த சாதனையை கண்டிப்பாக முறியடிப்பார் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் வயது எப்போதும் எதற்காகவும் நிற்காது.
எனவே, கோஹ்லி பல சாதனைகள் படைத்தாலும் சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமானதாகும்” என்று கூறியுள்ளார்.