கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்! நாம் தமிழர் சீமான் சொன்ன வார்த்தை

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பிரபல நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “சமூக சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டுமே இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

எண்ணித் துணிக கருமம் என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே ‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 2026யில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தான் இலக்கு என்றும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்று கூறிய நடிகர் விஜய், ஒப்புக்கொண்ட படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜயின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து கூறுகையில்,

“கட்சி தொடங்குவது எளிது. தொடர்வது ரொம்ப கடினம். தொடங்கும்போது இருக்கிற ஆர்வமும், ஈடுபாடும் கடைசி வரை இருந்தால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.

அதில் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் ஒரு நடிகரின் ரசிகர்கள் மட்டும் வாக்கு செலுத்தி நாட்டை ஆள்வது என்பது சரித்திர புரட்சியாகும். ஆனால், வெகுஜன மக்களை ஈர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது

“இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை இருக்கிறது. நடிகர் விஜயின் இந்த முடிவுக்கு பாராட்டுகள். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்” என கூறியுள்ளார்.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!