வெஸ்ட் இண்டீசை மொத்தமாக காலி செய்த அபோட்! தொடரை வென்ற அவுஸ்திரேலியா

சிட்னியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஜேக் பிரேசர் (10), இங்கிலீஸ் (9) சொற்ப ரன்களில் வெளியேற, கேப்டன் ஸ்மித்தை 5 ரன்னில் போர்டே வெளியேற்றினார்.

ஓரளவு தாக்குபிடித்த கிரீன் 33 ரன்களும், லபுஷேன் 26 ரன்களும் எடுத்தனர். இதனால் 91 ரன்களுக்கு 5 விக்கெட் என அவுஸ்திரேலியா தடுமாறியது.

அப்போது ஹார்டி மற்றும் மேத்யூ ஷார்ட் கைகோர்த்தனர். இந்த கூட்டணி 51 ரன்கள் சேர்த்தது. ஹார்டி 26 ரன்களில் மோட்டி ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஷார்ட்டும் 41 ரன்னில் மோட்டி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பேட்டர்ஸ் யாரும் அரைசதம் கூட அடிக்காத நிலையில், பந்துவீச்சாளரான சியான் அபோட் அதிரடியில் மிரட்டினார்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 63 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 69 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அவுஸ்திரேலியா 258 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மோட்டி 3 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் மற்றும் ரோமரியோ ஷெப்பர்ட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் 43.3 ஓவரில் 175 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருண்டது. அதிகபட்சமாக கியாசி கார்ட்டி 40 (51) ரன்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலிய தரப்பில் அபோட், ஜேசல்வுட் தலா 3 விக்கெட்டுகளும், சதர்லேண்ட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. 69 ரன்களுடன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய அபோட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!