பாலஸ்தீனியர்களுக்கு சார்பாக இலங்கை அமைச்சர் பேசுகிறார்….

பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் என்ற தனது கருத்துக்களை அழுத்தமாக வழங்கியிருந்தார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று(11) இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களையும் பேசியிருந்தார்.

“பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு உலக அளவில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்காக சென்றிருந்த காலத்திலேயே என்னால் உணரக்கூடியதாக இருந்தது” என்ற விடயத்தினையும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஆயுதப்பயிற்சி எடுத்த காலத்தில்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாலஸ்தீன மக்களின் உணர்வுகளையும் ஆழ்மன விருப்பங்களையும் நான் நேரில் கண்டிருக்கிறேன், அங்கு நான் ஆயுதப்பயிற்சி எடுத்த காலத்தில் அவர்களது போராட்டத்திலும் பங்கெடுத்திருக்கிறேன்” என்ற தனது அனுபவத்தினையும் அவர் இந்த வேளையிலே பகிர்ந்திருந்தார்.

“எமது மண்ணிலும் நானிருந்த எமது அன்றைய ஈ பி ஆர் எல் எவ் அமைப்பும் கண்காட்சிகளை நடத்தி பாலஸ்தீன விடுதலைக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது, போர் வெறியர்களாக அவர்கள் போராட புறப்பட்டவர்கள் அல்ல  தம் தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் அவர்கள் என்று” பாலஸ்தீனத்தின் விடுத்தலை நோக்கை தெளிவுபடுத்தியிருந்தார்.

“ஒரு கையில் ஒலிவ மரக்கிளையும், மறு கையில் ஆயுதமும் ஏந்தியுள்ளோம், எது வேண்டும் என்று அன்று யசீர் அரபாத் எழுப்பிய கேள்வி சகலரையும் ஈர்த்திருந்தது ”

ஆம், ஒலிவமரக்கிளை அங்கு சமாதானத்தின் சின்னம், சமாதானம் வேண்டுமா யுத்தம் வேண்டுமா என்று விடுதலைக்கான முழு முனைப்பையும் வெளிப்படுத்தியவர்கள் அவர்கள் என்று அமைச்சர் கருத்துரைத்தார்.

அவர் கூறிய அத்தகைய வழிமுறையே, சிறந்ததென நானும் கருதியிருந்தேன், பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று, எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *